தஞ்சை அருகே திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (28). இவர் இரும்பு சென்ட்ரிங்கு அடிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூரை சேர்ந்த ரேகா என்பவருக்கும் திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது. இந்நிலையில், கனகராஜ் இருசக்கர வாகனத்தில் செங்கிப்பட்டி அருகில் உள்ள காமாட்சிபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.
பின்னர், திருமணத்தை முடித்துக்கொண்டு திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் துவாக்குடி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.திருமணமாகி 20 நாட்களிலேயே புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.