தலைவாசல் அருகே நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வேட்டி சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக வழங்கும் வீடியோ வெளியாகி வைரல்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலை முறையாக நடத்தவும், அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களோ, பணமோ வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி, ராமசேஷாபுரம் பகுதியில், நேற்று மாலை, 6:00 மணியுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் திமுகவினர், இருசக்கர வாகனத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் தலைவாசல் அருகே சார்வாய் புதூர் ஊராட்சி சம்பேரி பகுதியில் திமுகவினர், வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.