காத்திருந்த ஆளுநர்..! விமானத்தில் பறந்த இருதயம்..! 15 நிமிட திக் திக் பயணம்..!

By Manikandan S R SFirst Published Feb 10, 2020, 5:01 PM IST
Highlights

சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் விமானத்தில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் போக்குவரத்தை சீர்செய்து தயார்நிலையில் வைத்திருந்தனர். இருதயம் கொண்டு செல்லப்படும் அதே விமானத்தில் சேலம் வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தும் பயணம் செய்ய இருந்தார். இதையடுத்து ஆளுநரும் மற்ற பயணிகளும் முன்கூட்டியே விமானத்தில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருத்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேந்தர் என்கிற வாலிபர் பணியாற்றி வந்தார். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வேலைக்கு சுரேந்தர் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்றும் தனது பைக்கில் அவர் வேலைக்கு சென்றிருக்கிறார். பின் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது அவரது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுரேந்தரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் மூளைச் சாவடைந்திருக்கிறார்.

இந்த தகவலை சுரேந்தரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி துடித்தனர். அவர்களை ஆறுதல் படுத்திய மருத்துவர்கள் உடலுறுப்பு தானம் குறித்து எடுத்துக்கூறினர். துயரமான சூழலிலும் உடலுறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதித்தனர். அதன்படி சுரேந்தரின் இருதயம், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள் ஆகியவை உடலுறுப்பு தான கழகத்தின் அனுமதி பெற்று அகற்றப்பட்டது. சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு இருதயம் தானமளிக்கப்பட்டது. அதேபோல சிறுநீரகங்களில் ஒன்று கோவை மருத்துவமனைக்கும் மற்றொன்று மணிப்பால் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. நுரையீரலும் மணிப்பால் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இதனிடையே இருதயம் வெளியே எடுக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள்ளாக தானம் பெறுபவருக்கு பொறுத்தப்பட்டாக வேண்டும். அதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் விமானத்தில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் போக்குவரத்தை சீர்செய்து தயார்நிலையில் வைத்திருந்தனர். இருதயம் கொண்டு செல்லப்படும் அதே விமானத்தில் சேலம் வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தும் பயணம் செய்ய இருந்தார். இதையடுத்து ஆளுநரும் மற்ற பயணிகளும் முன்கூட்டியே விமானத்தில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருத்தனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து இருதயம் வந்ததும் விமானத்தில் ஏற்றப்பட்டு உடனடியாக சென்னைக்கு கிளம்பி சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்தது. சேலம் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் வரை இருக்கும் தூரம் 23 கிலோமீட்டர் ஆகும். அதை கடப்பதற்கு பொதுவாக 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் காவல்துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 15 நிமிடங்களில் கடந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தைப்பூசத்தில் காவடி தூக்கிய வெள்ளையர்கள்..! கடல்கடந்து ஒலிக்கும் தமிழ்க்கடவுள் நாமம்..!

click me!