தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை இன்றுடன் நிறைவடைந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக முக்கிய அணைகள் பல வேகமாக நிரம்பின. தமிழகத்தின் பிரதான அணையான மேட்டூர் அணை கடந்த வருடம் மட்டும் நான்குமுறை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
undefined
டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடையும் தருவாயில் இருந்த பருவ மழை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இனி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உறைபனி காலம் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் அக்டோபர் 16 ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 2 சதவீதம் அதிகம் பெய்திருக்கிறது. எனினும் சில மாவட்டங்களில் மிகவும் குறைவான அளவில் பதிவாகி இருக்கிறது. மதுரை,வேலூர்,பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் பருவ மழை பொய்த்திருக்கிறது. சென்னையிலும் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வரும் கோடைகாலத்தில் தலைநகர் சென்னையில் அதிகமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.