76வது நாளில் 120 அடி..! கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை..!

By Manikandan S R S  |  First Published Dec 19, 2019, 1:42 PM IST

இந்த வருடம் மட்டும் 4 முறை நிரம்பியிருக்கும் மேட்டூர் அணை இன்றுடன் மொத்தம் 76 நாட்கள் 120 அடியில் நீடிக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழையின் தீவிரம் அதிகமாகவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் எட்டியது. அதன்பிறகு மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது.

Latest Videos

undefined

முதலில் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி 120 அடியை எட்டிய மேட்டூர் அணை, அதன் பிறகு அதே மாதத்தில் 24 ம் தேதியும், அக்டோபர் 23 ம் தேதியும் அடுத்தடுத்து தனது முழு கொள்ளளவை எட்டியது. கடைசியாக நவம்பர் 11 ம் தேதி மீண்டும் 120 அடியில் நிரம்பியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். முதன்முறையாக நிரம்பிய போது 15 நாட்களும், இரண்டாம் முறை 6 நாட்களும், அதன்பிறகு 16 நாட்களும் 120 அடியில் நீடித்தது. தற்போது நான்காவது முறை நிரப்பிய பிறகு இன்றுடன் 39 வது நாளாக 120 அடியில் அணையின் நீர்மட்டம் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 76 நாட்கள் அணையின் நீர்மட்டம் உச்சத்தில் இருக்கிறது.

தற்போது அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணையின் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியிருக்கிறது. கழிவு நீர் கலந்து வருவதால் இவ்வாறு நிறம் மாறி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகளவில் துர்நாற்றமும் வீசுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!