சேலம் மாவட்டத்தின் கூலமேடு கிராமத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கிறது கூலமேடு கிராமம். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலின்படி இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து தகுதி பெற்ற வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தின் தலைவர் பதவி பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
undefined
இதே ஊரைச் சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி வெள்ளையம்மாள். இந்த தம்பதியினரின் மகன் தர்மலிங்கம். கிராமத்தின் அதிமுக கிளை செயலாளராக இருக்கிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட வெள்ளையம்மாள் முடிவு செய்தார். அதற்காக வேட்மனுவும் தாக்கல் செய்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றார். மற்றொருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வெள்ளையம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளையம்மாளுக்கு சொந்தமாக விளைநிலங்கள் இருக்கிறது. அதில் விவசாயம் பார்த்து குடும்பம் நடத்தி வருகிறார். தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த வெள்ளையம்மாள் 14 வயதில் திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட தனக்கு 70 வயதில் பச்சை மையில் கையெழுத்திட அதிகாரம் வழங்கிய கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் மக்களுக்கு விசுவாசமாக இருந்து அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு பாடுபட போவதாகவும் கூறியிருக்கிறார்.