மதபோதனை செய்ய வந்து கொரோனாவை பரப்பிய இந்தோனேஷியர்கள்.. கைது செய்து சிறையில் அடைத்த தமிழ்நாட்டு போலீஸ்

By karthikeyan V  |  First Published Apr 16, 2020, 10:17 PM IST
சேலத்தில் கொரோனா பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 11 இந்தோனேஷியர்கள் உட்பட 16 பேர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தாலும், தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டிருப்பதால், அதிகமானோர் குணமடைந்துவருவதுடன், பாதிப்பு எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கைகளால், சமூக தொற்றாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக, மதப்பிரசாரம் செய்யவந்த 11 இந்தோனேஷியர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் சேலம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவிலிருந்து 11 பேர் கொண்ட குழு, மத பிரசாரம் செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி சேலத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடன் சென்னையை சேர்ந்த வழிகாட்டி ஒருவர் உடன் வந்துள்ளார். அவர்கள் கிச்சிப்பாளையம் ஜெய் நகர் பகுதியில் மத பிரசாரம் செய்துள்ளனர்.



இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த 11 பேரும் சேலத்தில் தங்கியிருந்தது போலீஸாருக்கு தெரியவில்லை. இந்த தகவல் போலீஸாருக்கு தாமதமாக தெரியவர, உடனடியாக 11 இந்தோனேஷியர்கள், அவர்களது வழிகாட்டி ஆகிய 12 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர்கள் சுற்றித்திரிந்த பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்த 11 இந்தோனேஷியர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய 5 பேர் என மொத்தம் 16 பேரை சேலம் கிச்சிப்பாளையம் போலீஸார் கைது செய்தனர். சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வீடியோ காலில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
click me!