கலைக்கதிரவனும் கிருஷ்ணசாமியும் ஐடி வேலையை விட்டுவிட்டு கருவாடு விற்பனையைத் தொடங்கி சாதித்துக் காட்டியுள்ளனர்.
நண்பர்களான கலைக்கதிரவனும் கிருஷ்ணசாமியும் 2009ஆம் ஆண்டு வெவ்வேறு கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தனர். இருவருக்கும் சென்னையில் வேலை கிடைத்தது. அங்கு ஒரே அறையில் தங்கி வேலை பார்த்துவந்த அவர்கள் பின் கடலூர் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பணி நிமித்தமாகச் சென்றுவந்தனர்.
அவர்கள் ஒருவருக்கும் ஒரே கனவு இருந்தது. சொந்த ஊரான ராமநாதபுரத்திற்குத் திரும்பி, சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் அது. பொறியியல் துறையில் படித்த மற்ற மாணவர்கள் போல தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்க நினைக்காமல், கருவாடு விற்பனையைத் தேர்ந்தெடுத்தனர்.
கடலூரில் உள்ள கழிவு நீர் மேலாண்மை நிறுவனத்திலும், பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணிபுரிந்தபோதுகூட, இருவரும் தங்கள் தொழில் திட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
2019ஆம் ஆண்டில் கலைக்கதிரவன் கடலூரில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ராமநாதபுரம் திரும்பி, ‘லெமூரியன் பஜார்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இரண்டு வருடங்கள் கழித்து கிருஷ்ணசாமியும் அவருடன் சேர்ந்துகொண்டார்.
கருவாடு விற்பனையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் தரமான கருவாட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமானதாக இருந்தது. “நான் ஐடி வேலையை விட்டுவிட்டால் கல்யாணத்துக்குப் பெண் கிடைக்காமல் போகலாம் என்று குடும்பத்தினர் பயந்தனர். அதனால் நான் பொறுத்திருந்தேன். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து மனைவியையும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினேன்” என்று கிருஷ்ணசாமி கூறுகிறார்.
பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்த இரண்டு வருடங்களில் தனது நண்பருக்கு உதவுவதற்காக பெங்களூருக்கும் ராமநாதபுரத்துக்குமாக வார இறுதி நாட்களில் வந்துசென்றுகொண்டிருந்தார் கிருஷ்ணசாமி.
இருவரும் தங்கள் தயாரிப்பை ஆன்லைனில் விற்க விரும்பினர். தரமான கருவாடு கிடைப்பது, அதன் வாசம் வெளியேறாத வகையில் பேக் செய்வதும் பெரிய சவாலாக இருந்தது. “பல மீனவர்கள் விற்பனையாகாத மீன்களை மட்டுமே கருவாடாக பதப்படுத்துகின்றனர். ஆனால், இலங்கையில் நல்ல மீன்களையே உலர்த்தி கருவாடாக மாற்றுகின்றனர். உலர்ந்த மீன்களை வாங்குவதற்காக நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். இறுதியாக, பாம்பனில் இருந்த மூக்கன் என்ற மீனவர் நாங்கள் எதிர்பார்த்த தரத்தில் கருவாட்டை வழங்க ஒப்புக்கொண்டார்.” என்கிறார் கலைக்கதிரவன்.
TCS Milind Lakkad: சிறந்த ஸ்டார்ட்அப் ஊழியர்களைக் தேடிப் பிடித்து வேலை கொடுக்கும் டிசிஎஸ்!
மண்டபத்தில் உள்ள 10 பேர் கொண்ட புதுமைப்பெண் என்ற மகளிர் சுயஉதவிக் குழு கருவாட்டை காற்று புகாத வகையில் பேக் செய்து தர சம்மதித்தது. க்யூஆர் கோடு மூலம் கருவாட்டை சமைப்பதற்கான யூடியூப் வீடியோவை இணைப்பு, தரச்சான்றிதழ் போன்ற தகவல்களை வழங்கும் வகையில் பேக்கிங் செய்யப்படுகிறது. தங்கள் தயாரிப்பை அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
மதுரை ரயில்வே கோட்டம் ‘ஒரு ரயில் நிலையம், ஒரு தயாரிப்பு’ (OSOP) திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்திற்கான பொருளாக கருவாட்டைத் தேர்ந்தெடுத்தது. அதில் லெமூரியன் பஜாருக்கு விற்பனை வாய்ப்பு கிடைத்தது. “ஸ்டேஷனில் ஒரு பெட்டியுடன் உட்கார்ந்து இருந்தோம், பல பயணிகள் நாங்கள் இனிப்புகளை விற்பதாகக் கருதினார்கள். அது எங்கள் தயாரிப்பு மற்றும் பேக்கிங் முறைக்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் கிருஷ்ணசாமி.
“ஒரு பெரிய நகரத்தில் அதிக விற்பனை சாத்தியம் என்பதால் மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு இடம் கேட்டோம். ஓராண்டுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கடல் மற்றும் கடற்கரை காட்சியை பின்னணியாகக் கொண்டு கடையை அழகாக வடிவமைத்தோம். இப்போது மதுரை ஜங்ஷனில் உள்ள ஒரு பூக்கடைக்கு அருகிலேயே எங்கள் கடை உள்ளது” என்று அங்கு விற்பனையை கவனித்துக்கொள்ளும் கலைக்கதிரவன் கூறுகிறார்.
லெமூரியன் பஜாரின் ரூ.100 முதல் ரூ.400 வரை விலையில் 30 வகையான கருவாடுகள் விற்பனைக்கு உள்ளன. நெத்திலி தொடங்கி சுறா வரை பல வகைகள் உள்ளன. உப்பு உள்ள மற்றும் உப்பு இல்லாதவை என ரகம் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
மாதம் ரூ.15 லட்சத்துக்கும் ஓராண்டில் ரூ.2 கோடிக்கும் விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றனர். விரைவில் இன்னும் பல பகுதிகளில் விற்பனை நிலையங்களை நிறுவுவதற்காக நபார்டு வங்கியிலிருந்து ரூ.25 லட்சம் கடன் உதவியும் பெற்றுள்ளனர்.
Karthik Subramaniam: இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞருக்கு நேஷனல் ஜியோகிராபிக் பரிசு