
Sri Lankan Navy Arrests 8 Rameswaram Fishermen: தமிழ்நாட்டின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம்
சில நேரங்களில் நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அதற்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
தாங்கள் கைது செய்யப்படுவது குறித்து மீனவர்களே பலகட்ட போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தனுஷ்கோடி தலைமன்னார் அருகில் படகில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி நமது மீனவர்களை கைது செய்தனர்.
மீனவர்கள் கோரிக்கை
மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். வங்கக் கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து அண்மையில் தான் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் இலங்கை கடற்படை மீண்டும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன?
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நமது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்து வருகிறது. மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல்களின்போது இதை வைத்து அரசியலும் செய்கின்றனர். ஆனால் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.