ராமநாதபுரத்தில் நடந்த இளைஞர் கொலை சர்ச்சையாகி உள்ள நிலையில், மாவட்ட எஸ்.பி. திடீரென காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவரும், இவருடைய நண்பர் யோகஸ்வரனும் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகே நின்று பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்தவர்கள் நண்பர்கள் இருவரையும் வெட்டி சாய்த்தது. இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அருண் பிரகாஷ் சிகிச்சை பலலனின்றி உயிரிழந்தார். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தக் கொலை தொடர்பாக ட்விட்டரில் பாஜகவினரும் பாஜக ஆதரவாளர்களும் டிரெண்டிங் செய்தனர். விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியதால், அது பிடிக்காத சில இஸ்லாமிய இளைஞர்கள் இருவரையும் வெட்டியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டோர் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், இந்தக் கொலை சம்பவத்துக்கு முன் விரோதமே காரணம் என்று தெரிவித்தனர், மாவட்ட எஸ்.பி. வருண்குமார், இந்த வழக்கிறகு மத பிரச்னை காரணமல்ல என்றும், தவறான போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேர் நேற்று மாற்றப்பட்டனர். இதில் ராமதாபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதிய எஸ்.பி.யாக சென்னை பூக்கடை துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். வருண்குமார் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.