தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

By Manikandan S R S  |  First Published Apr 28, 2020, 4:00 PM IST

கடந்த ஆண்டு இதே நேரத்தில் அரிச்சல்முனை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் மணலில் நடந்து சென்று கடற்கரையை வேடிக்கை பார்த்த பகுதி முழுவதும் தற்போது கடல் நீரால் சூழப்பட்டிருக்கிறது.


இந்தியாவின் தென்கோடி எல்லையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இருக்கிறது தனுஷ்கோடி. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரும் புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த ரயில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 115 பேர் புயலால் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மத்திய அரசு தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவித்தது.

Latest Videos

undefined

இதன்பிறகு அப்பகுதி சுற்றுலா நகரமாக மாற்றப்பட்டது. அங்கிருக்கும் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு கடற்கரையோரத்தில் தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டன. தனுஷ்கோடியின் எல்லையின் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில் ரவுண்டானா ஒன்றும் அதன் மையப்பகுதியில் அசோகர் ஸ்தூபியும் நிறுவப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கையின் சீற்றத்தால் சீரழிந்து போன தனுஷ்கோடி நகரை கண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அப்பகுதியின் கடற்கரை நிலப்பரப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரிச்சல்முனை சாலை தடுப்பு சுவரில் இருந்து வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் விசாலமான நிலப்பரப்பாக இருந்த பகுதி முழுவதும் தற்போது கடல் நீரால் சூழப்பட்டு கரை தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் அரிச்சல்முனை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் மணலில் நடந்து சென்று கடற்கரையை வேடிக்கை பார்த்த பகுதி முழுவதும் தற்போது கடல் நீரால் சூழப்பட்டிருக்கிறது. கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாகவே இம்மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனுஷ்கோடி பகுதியும் வெறிச்சோடி போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!