'மானூத்து மந்தையில, மான் குட்டி பெத்த மயிலே'... ஊர் மெச்சிய தாய் மாமன்களின் சீர்வரிசை..!

By Manikanda PrabuFirst Published May 29, 2024, 6:18 PM IST
Highlights

காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் அளித்த சீர்வரிசையை சொந்த பந்தங்களும் ஊர் பொதுமக்களும் மூக்கில் விரல் வைத்து பார்த்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது

'செவி பூட்டு விழாவா.. அல்லது சேரர் காலத்து சீதனமா' என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சகோதரி குழந்தைகளின் காதணி விழாவிற்கு சீர்வரிசையை வாகனங்களிலும் தோள்களிலும் வரிசையாக கொண்டு வந்த தாய் மாமன்களின் பாசத்துக்குரிய செயல் ராமநாதபுரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு 101 வகையான தட்டுத் தாம்பூலங்களில் சீர்வரிசையோடு வந்ததை ஊர் மக்களே வியந்து பார்த்தனர்.

நமது தமிழ் கலாசாரத்தில் திருமணம் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளுக்கும் சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் மெச்சும் வகையில் வெகு விமரிசையாக சீர் கொடுப்பார்கள். நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் இந்த சீர் கொடுக்கும் முறை இன்னும் கூட பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய பழக்கமாகவே தொடர்ந்து வருகிறது.

Latest Videos

இந்நிலையில், ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே காதணி விழாவிற்கு  அசத்தலாகச் சீர்வரிசையைக் கொடுத்துள்ளனர் உறவினர்கள். மொத்தம் 101 வகையான தட்டுத் தாம்பூலங்களில் சீர்வரிசையோடு வருகை தந்த தாய் மாமன்களை கண்டு ஊர் மக்களே வியந்து போயினர்.

ராமநாதபுரம் மாவட்டம்  'சுந்தரமுடையான்' கிராமத்தை செர்ந்த தம்பதிகள் இலக்கியா - தில்லை கபில். இவர்களுக்கு தில்லை லக்‌ஷமித்ரா, கோஷி யாழினி என இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் அங்குள்ள  'தில்லை நாச்சியம்மன் கோவிலில் வைத்துக் காதுகுத்து விழா நடைபெற்றது. வெகு விமரிசையாக நடந்த இந்த விழாவிற்கு குழந்தைகளின் தாய் மாமன்கள், கரிஹரன், சுபாஷ், ஆகாஷ் ஆகியோர் மேளதாளங்கள் முழுங்க கம்பீரமாக வந்து இறங்கினர்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யாருக்கு என்ன பலம்?

பலத்த ஆரவாரத்தோடு 101 தட்டுகளில் தங்க நகைகள், பழங்கள், ஆடைகள் எனப் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகளைச் சுமந்து வந்த உறவினர்கள், முக்கிய சாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாகவே வந்தனர். ஊரே வியக்கும் வகையிலான சீர்வரிசைகளோடு வந்த தாய் மாமன்களை அவர்களது குடும்பத்தினரும் சந்தனமிட்டும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். 

இந்த விழாவுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் சீர்வரிசைத் தட்டுகளை எடுத்து வந்தனர். விழாவிற்கு வந்திருந்த சொந்த பந்தங்கள் சீர்வரிசையாக கொண்டு வந்த நகைகளைக் காதணிச் செல்வங்களுக்கு அணிவித்து மகிழ்ந்தனர். அவர்களை 'சுந்தரமுடையான்' கிராம மக்கள் சந்தனமிட்டு வரவேற்று உபசரித்தனர்.

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் நாம் உறவுகளை மறந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தொன்மை மாறாமல் பாரம்பரிய முறைப்படி ஆட்டம் பாட்டத்துடன், சீர்வரிசை கொண்டு வந்த உறவினர்களை ஊரே வியந்து பாராட்டி வருகிறது.

click me!