பாஜக வெற்றி..! சாதி அரசியலால் பின்வாங்கிய திமுக, அதிமுக..? கமுதி களத்தின் பரபர பின்னணி..!

By vinoth kumarFirst Published Feb 15, 2022, 2:54 PM IST
Highlights

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் ஒருவர் முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் ஒருவர் முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். ஆளுங்கட்சியான திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆகையால், முன் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே, பல்வேறு இடங்களில் போட்டியில்லாமல் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 15 வார்டுகள் கொண்ட கமுதி பேரூராட்சியில் 14வது வார்டில் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் தற்போது ஒரு உண்மை தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர பாண்டியன் என்பவரும், இஸ்லாமிய சமூக வேட்பாளரான முகமது இப்ராஹீம் உசைன் என்பவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டனர். இந்த போட்டி மத, சாதி பிரச்சனையாக மாறி கலவரம் ஏற்பட்டது. இஸ்லாமிய சமூக வேட்பாளருக்கு ஆதரவு தந்தார்கள் என்பதற்காக ஆதிதிராவிட சமூக மக்களின் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதல் அப்போது பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அத்தேர்தலில் 420 வாக்குகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய சமூக வேட்பாளர் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவர் ஆனார். வீரசிகாமணி என்கிற அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து 1971ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தார். அப்போது, அந்த கூட்டத்தில்  பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்களை, ஊர்கூடி பேசி ஒவ்வொரு சாதி, மதம் சார்ந்தவர்கள் ஒரு முறையாக தேர்வாகும் வகையில் சுழற்சி முறையில் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இடையே 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், 1986ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஒப்பந்தத்தின்படியே 1986ஆம்  ஆண்டு நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமி தலைவராகவும், கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த வியாகுலம் பிள்ளை துணைத் தலைவராகவும் நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அதிமுக சார்பில் கந்து இக்பால் என்பவரை இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கினார். அனைத்து சமுதாய ஒற்றுமைக்கு எதிராக போட்டியிட்ட எம்.ஜி.ஆர் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கந்து இக்பால் டெப்பாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். அன்று தொடங்கி இன்றைய தினம் வரையில் கமுதி பேரூராட்சியில் ஊர் மக்கள் கூடி தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சுயேட்சையாக களமிறங்கி போட்டியே இல்லாமல் வெற்றி பெறுவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், சாதி, மத, அரசியல் மோதல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கமுதி பேரூராட்சியில் இதே முறையில் தான் ஊர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 14வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் சத்யா ஜோதி ராஜா, என்பவர் அவர் சார்ந்த சமுதாய ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டு ‘சுயேட்சை வேட்பாளர்’ என்று தான் மனு செய்ய இருந்தார். கடைசி நேரத்தில் பின்பற்றி வரப்படும் நெறிமுறைக்கு புறம்பாக அவர் பாஜகவின் கடிதம் கொடுத்ததால் பாஜக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மதநல்லிணக்க ஒற்றுமையின் கீழ் தேர்வாகி கிடைத்த வெற்றியை மறைத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக பாஜகவினர் கொண்டாட்டத்தில்  ஈடுபட்டு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக மற்ற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

click me!