ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இடம் வாங்குவதற்காக கொடுத்திருந்த ரூ. 46 லட்சத்தை திரும்ப கேட்ட தொழிலதிபரை காரில் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வயது 56. சென்னையில் குடும்பத்துடன் வசிக்கும் இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி நான்கு வழிச்சாலையில் முத்துசெல்லாபுரம் விலக்கு அருகே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி பிருந்தாவனம் என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டி வருகிறார்.
இந்தக் கட்டிடத்திற்கு மேலாளராக பணியாற்றுபவர் விக்கிரவாண்டிவலசு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன். இவர் மாதவன் நகரில் வீடு விலைக்கு வருவதாகக் கூறி பழனிச்சாமியிடம் ரூ. 46 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் பெயரில் ஆவணம் பதிவு செய்யாமல் பாலமுருகன் என்ற பெயரில் ஆவணம் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கொடுத்த பணத்தை திரும்பி தருவதாக பாலமுருகன் கூறி வந்துள்ளார். ஆனால், பணத்தை திரும்ப தரவில்லை. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி
இதற்கிடையே, கடந்த 12 ஆம் தேதி சென்னையிலிருந்து பழனிச்சாமி மாலை 6.30 க்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாம்புவிழுந்தான் பகுதியில் குடியிருக்கும் செல்வகுமார் (46) தொலைபேசியில் பழனிச்சாமியை அழைத்தார். ''மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த மனு சம்பந்தமாக ரூ. 46 லட்சம் பாலமுருகன் கொடுத்து விடுவார். பணம் ரெடியாக இருக்கிறது. எனது வீட்டிற்கு வந்து பெற்றுக் கொள்ளவும்'' என்று செல்வகுமார் கூறியுள்ளார்.
இதனை நம்பி செல்வகுமாரின் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள குடோனுக்கு பழனிச்சாமி சென்றார். அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கிரவாண்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த உத்திரகுமார், வைகைநகர் ஆனந்த், கீழகன்னிச்சேரி நேரு முருகன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் பழனிச்சாமியின் கை, கால்களை கயிற்றால் கட்டி, முகத்தை மூடி, வாயில் துணியை திணித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, நாங்கள் சொல்வதைக் கேட்டால் உயிருடன் விடுவோம், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், பிருந்தாவனம் கட்டிட இடத்தின் பத்திரம், பாலமுருகன் பெயரில் உள்ள வீட்டுப் பத்திரம், தெளிச்சாத்தநல்லூர் இடப் பத்திரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பழனிச்சாமியின் கார் ஓட்டுநர் சுரேஷ் (எ) கனகராஜுக்கு போன் செய்துள்ளனர். காரில் வருபவரிடம் பத்திரங்களை கொடுத்து விடுமாறு பழனிச்சாமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடத்திய கும்பல் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பெற்று, எழுதப்படாத பத்திரங்களில் கையெழுத்து, கைரேகை வாங்கியதாக கூறப்படுகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூன் மாதமே மறு வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு
மேலும், பதிவு செய்த பத்திரங்களை வேறு நபருக்கு விற்பனை செய்வதற்காக கையெழுத்தும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை காரில் பழனிச்சாமியை பகைவென்றி கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பழனிச்சாமியிடம் மீதம் உள்ள ஆவணங்களை எடுத்து வருமாறு கடத்தல் கும்பல் இறக்கி விட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட பழனிச்சாமி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். மேலும், வழக்கறிஞருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையறிந்த கடத்தல் கும்பல் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பரமக்குடி எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் பழனிச்சாமி புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், உத்தரகுமார், செல்வகுமார், பாலமுருகன், நேரு முருகன், ஆனந்த் ஆகிய நான்கு பேர் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.