புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனத கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக பிரத்தியே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆனால் திடீரென இந்த தொட்டியில் இருந்து வரக்கூடிய குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பினர். அதன் பின்னர் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் மனித கழிவு (மலம்) கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட போதிலும் தற்போது வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில், தற்போது வரை இந்த விவகாரத்தில் எந்தவித துப்பும் கிடைக்காததால் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனை உட்பட பல்வேறு யுக்திகளை கையாண்ட போதியலும் காவல் துறையினருக்கு இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களையே குற்றத்தை ஒத்துக் கொள்ள காவல் துறையினர் வற்புறுத்துவதாகவும் வேங்கைவயல் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.