புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு தனிநபருக்கு எவ்வளவு மதுபானம் வழங்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன.
மேலும் ஒயின் ஷாப்புகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மே 7(நாளை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய டாஸ்மாக் கடைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலை தவிர்த்து தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயது மேற்பட்டவர்களும், மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை 40-50 வயதுக்குட்பட்டவர்களும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 40 வயதுக்குட்பட்டவர்களும் மதுபானங்களை வாங்கலாம் என வயது வாரியாக மது வாங்க நேரம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
அதேபோல தனிநபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும். மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு தனிநபருக்கு எவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வரையறை செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு தனிநபருக்கு ஒரு ஃபுல்(நான்கு குவார்ட்டர், 2 ஹாஃப் அல்லது ஒரு ஃபுல்) அல்லது 4 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.