கிளம்பிடுச்சுய்யா கிளம்பிடிச்சு... பதற வைக்கும் ஃபானி..!

By Thiraviaraj RM  |  First Published Apr 27, 2019, 11:47 AM IST

அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். 


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, வரும் 30 தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது, இலங்கை திரிகோணமலைக்கு தென் கிழக்கே ஆயிரத்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே ஆயிரத்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், மையம் கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30ம் தேதி வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் தெற்கு ஆந்திராவை தீவிர புயலாக நெருங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக கடலோர பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்றும் சத்யகோபால் தெரிவித்தார். 

Latest Videos

ஃபானி புயல் குறித்து, தஞ்சாவூரில் உள்ள 36 கடலோர மீனவக் கிராமங்களுக்கு கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 900 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப் படகுகள் ஏற்கனவே கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

click me!