புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தை வாங்கிய கடனுக்காக சிறுமியை கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியரை கைது செய்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கீரனூரில் இயங்கி வரும் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் மருதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வனத்து ராஜா (வயது 32)என்பவர் மாதாந்திர தவணையில் ரூ.50 ஆயிரம் கடன்வாங்கி உள்ளார். இதில் சில ஆயிரங்களை அவர் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெரிய சூரியூரைச் சேர்ந்த தங்கம் மகன் விக்னேஷ் (27)என்பவர் பண வசூலிப்பதற்காக மருதூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உள்ளார்.
அங்கு வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் ஜனனி (11) கூறியுள்ளார். உடனடியாக அந்த குழந்தையைக் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பைனான்ஸ் நிறுவனத்துக்கு வந்து விட்டார். இந்நிலையில் குழந்தையை காணாமல் தேடிய போது பைனான்ஸ் காரர்கள் அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வனத்து ராஜா கீரனூர் காவல் நிலையத்தில் குழந்தையை கடத்திச் சென்றதாக புகார் கொடுத்தார். உதவி ஆய்வாளர் மரிய தாஸ் மற்றும் காவல் துறையினர் குழந்தையை கடத்தி வைத்திருந்த நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்றதாக விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடனுக்காக குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊர் மக்கள் முன்னிலையில் கணவன், மனைவி மீது தாக்குதல்: மனமுடைந்த தம்பதி தீக்குளிக்க முயற்சி