அத்தனை மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, அதே இடத்தில் தேவைக்கேற்ப, அதனை அம்மா உணவகங்களாகவும், அம்மா காய்கறிக் கடைகளாகவும் மாற்றினால், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுவதோடு, விவசாயிகள் தங்களுடைய வேளாண் பொருட்களை நேரடியாக அரசிடம் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், குறைந்த விலையில் மக்களுக்குத் தரமான காய்கறிகள் கிடைப்பதற்கும் வழியாக அமைவதோடு, வேளாண் உற்பத்தி மிகுந்த அளவில் பெருகும் என்பது உறுதி.
அரசு நடத்தும் மதுபானக் கடைகளை மூடிவிட்டு அவற்றை அம்மா உணவகங்கள், அம்மா காய்கறிக் கடைகள் என மாற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் சதீஷ்குமார் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"தமிழக முதல்வருக்கு வணக்கம்.
உலகம் முழுவதுமாக கரோனா எனும் தொற்றுநோய் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், அது நமது தேசத்தையும், நமது மாநிலத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது என்பது உண்மை. இந்த நேரத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்க்கையோடு சேர்த்து, அரசின் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது மறுக்க முடியாத உண்மை. அரசால் இயல்பான சூழலில் அடைக்க முடியாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த மதுபானக் கடைகளை அடைக்க இயற்கையாக கொடுத்துள்ள வாய்ப்பாகத் தான் இந்தக் கரோனாவை பார்க்க முடிகிறது. அரசுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் கூட, மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு, தமது குடும்பங்களோடு, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதைக் கண்கூடாக காண்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஓர் அரசினுடைய மகிழ்ச்சி என்பதும் தனது குடிமக்களுடைய மகிழ்ச்சி என்பதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் இது நமது அரசுக்கு நற்செய்தியே. கரோனா என்னும் தொற்றுநோய் காரணமாக சமூகப்பரவலாக அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு அமல் செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைகளை நமது மாநிலத்தில் திறந்தது பேரதிர்ச்சியாக இருந்தாலும்கூட, தற்பொழுது நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. உண்மையில் இந்த தீர்ப்பு அரசுக்கு நன்மை அளிக்கக்கூடிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் மக்களின் உயிருக்கு முன்னால் அனைத்தும் சாதாரணமே! நோய்த்தொற்றுப் பரவல் அச்சத்தை இந்த தீர்ப்பு சரிசெய்துள்ளது. இருந்தும் திறந்திருந்த இந்த இரண்டு நாட்களுக்கான விளைவுகள் என்னவென்பதை வரும் நாட்கள் நமக்கு பாடம் சொல்லும்.
தயவுசெய்து அதனை மீண்டும் திறப்பதற்கு ஆலோசிக்காமல் மூடியது, மூடியதாகவே இருக்கட்டும் என்ற நிலையில் சிறந்த முடிவு எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு பணிவான கோரிக்கையை உங்கள் முன்னால் வைக்கின்றேன். தமிழ்நாட்டின் மொத்த பகுதிகளையும் இணைக்கின்ற அளவுக்கு, மதுபானக் கடைகள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. அத்தனை மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, அதே இடத்தில் தேவைக்கேற்ப, அதனை அம்மா உணவகங்களாகவும், அம்மா காய்கறிக் கடைகளாகவும் மாற்றினால், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுவதோடு, விவசாயிகள் தங்களுடைய வேளாண் பொருட்களை நேரடியாக அரசிடம் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், குறைந்த விலையில் மக்களுக்குத் தரமான காய்கறிகள் கிடைப்பதற்கும் வழியாக அமைவதோடு, வேளாண் உற்பத்தி மிகுந்த அளவில் பெருகும் என்பது உறுதி.
மதுபானக் கடைகளை அடைத்து அவற்றை அம்மா உணவகங்கள், அம்மா காய்கறிக் கடைகள் என மாற்றுவதன் மூலம் அங்குள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க முடியும். குறைந்த விலையில் உணவினை மக்களுக்கு அளிக்க முடியும். குறைந்த விலையில் காய்கறிகளை அளிக்க முடியும். விவசாயத்தை ஊக்கப்படுத்தி வளர்ச்சியடையச் செய்ய முடியும். இத்தனை நல்ல விஷயங்களையும் செய்ய மதுபானக் கடைகளை மூடுவது அவசியம். நிச்சயமாக! இது கடவுள் கொடுத்த மிகப்பெரும் வாய்ப்பு. இதனைத் தாங்கள் செய்வீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு இக்கோரிக்கையை தங்களுக்குப் பணிவுடன் வைக்கின்றேன்". இவ்வாறு ஆசிரியர் சதீஷ்குமார் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.