மேடநாடு மலையைக் குடைந்து ரோடு! சுற்றுலாத்துறை அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்

By SG Balan  |  First Published Apr 15, 2023, 11:55 AM IST

மேடநாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி மலையைத் தகர்த்து சட்டவிரோதமாக சாலை அமைத்தது தொடர்பாக அமைச்சர் கே. ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகில் உள்ள மேடநாடு வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்குச் செல்வதற்கான அத்துமீறி மலையைக் குடைந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்குச் சாலை போட்டப்பட்டுள்ளதாக வனத்துறைக்குப் புகார் வந்தது.

இந்தப் புகாரின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக சாலை போடும் பணி நடைபெற்றிருப்பதை உறுதி செய்துள்ளனர். முறையான அனுமதி ஏதும் இல்லாமல் போட்டப்பட்ட சாலை தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தனியார் எஸ்டேட் மேலாளர் பாலமுருகன். மற்ற இருவரும் பொக்லைன் ஓட்டுநர்களான உமர் ஃபாரூக் மற்றும் பங்கஜ்குமார் சிங்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த மூவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர் சட்டவிரோதமாக சாலை போட பயன்படுத்திய பொக்லைன் இயந்திரங்களும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ‘‘சுற்றுலாத்துறை அமைச்சரின் மருமகன் சிவகுமாரின் தேயிலைத் தோட்டம் இந்தப் பகுதியில் உள்ளது. அந்தத் தோட்டத்துக்குச் சாலையை போடுவதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனத்துறை அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட இயந்திரங்கள் மூலம் சாலை விரிவாக்கம் செய்துள்ளனர்" என்று நீலகிரி வனக்கோட்டத்தைச் சேர்ந்த வன அலுவலர் கவுதம் சொல்கிறார்.

மேலும், எஸ்டேட் மேலாளர் மற்றும் இரண்டு பொக்லைன் ஓட்டுநர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாவும் எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவிக்கிறார்.

மேடநாடு வனப்பகுதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தை, கரடி, யானை, காட்டு மாடு போன்ற வன விலங்குகளும், இருவாச்சி முதலிய அபூர்வமான பறவைகளும் அதிகம் காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி இப்பகுதியில் சோலை மரக்காடுகள், குறிஞ்சிப் புதர்கள் போன்ற இயற்கை வளங்களும் உள்ளன. இத்தனை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் மேடநாடு வனப்பகுதியில் மலையைக் குடைந்து ரோடு போடும் பணி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!