பிரேமலதா சொல்லி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கூட்டணி இறுதியாவது தொடர்பாக இதுவரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதற்கிடையே அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா இல்லையா என்று கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்று எழுந்துள்ள கேள்விகளுக்கு இன்று மாலைக்குள் பதில் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புத, புநீக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக இக்கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி ஏற்பட்டதால், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. பிரேமலதா நடத்திய பிரஸ் மீட்டிலும், ‘ஆக்கப் பொறுத்தீர்கள், 2 நாட்கள் மட்டும் ஆறப்பொறுங்கள்’ என்று தெரிவித்தார். ஆனால். அதே பிரஸ் மீட்டில் அதிமுக ஆட்சி தொடர்வதற்கு தேமுதிகதான் காராணம்,. 37 அதிமுக எம்.பி.கள் இருந்தும் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைத்தது எனப் பிரேமலதா பேசியதால், அதிமுக தரப்பிலிருந்து அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுவருகிறது.
பிரேமலதா சொல்லி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கூட்டணி இறுதியாவது தொடர்பாக இதுவரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதற்கிடையே அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா இல்லையா என்று கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணி அமைவதில் முக்கிய பங்கு வகித்த அமைச்சர் தங்கமணி இதுபற்றி பதில் கூறியிருக்கிறார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறுவது குறித்து கருத்து தெரிவித்தார்.
“நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் இதர கட்சிகள் (தேமுதிக) இணையுமா என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைக்கும்.” என்று தங்கமணி தெரிவித்தார்.
மேலும் பிரேமலதாவுக்கு பதில் அளிக்கும் வகையில், “மத்தியில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்தனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.” என்று தெரிவித்தார்.