மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்த தமிழரசன் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஸ் சேகர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 877 காளைகள் அவிழ்க்க்கப்பட்டன. 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேடு சேர்ந்த அரவிந்த் ராஜ் மார்பு பகுதியில் காளை குத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
undefined
மதுரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள நிஸான் காரை பரிசாக வென்றார். பாலமேட்டைச் சேர்ந்த மணி 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை முதல் பரிசை பெற்றது. இந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் மானூத்தைச் சேர்ந்த மணி என்பவரின் காளை இரண்டாவது பரிசை வென்றது. ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன் குமார் சார்பாக இரண்டாவது சிறந்த காளைக்கு பசுவும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.
அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.