விவசாயம் அநாதையாக்கப்படுகிறது.. ஊழல் அதிகாரிகளை ஏன் தூக்கிலிடக் கூடாது? மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்..!

By vinoth kumarFirst Published Nov 2, 2020, 4:58 PM IST
Highlights

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை. அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல்செய்யப்படுகிறது. இதற்காக டெல்டா பகுதியில் மட்டும் 10 முதல் 15 நாட்கள் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் மழையினால் நெல் ஈரமாகி சேதமடையும் நிலை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், கொள்முதலுக்கு தாமதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கும், விளைபொருளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அரசுத் தரப்பில் ஏற்படுத்தி கொடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது: நமது நாட்டில் விவசாயம் அநாதையாக்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கவில்லை என நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பது ஏன்? தமிழகத்தில் ஊழல் என்பது புற்றுநோயைப்போல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. 

உரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால்தான் தடுக்க முடியும். ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

click me!