மதுரை அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கும் நாவினிப்படியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ஜீவா(30). இந்த தம்பதியினருக்கு பாண்டீஸ்வரி (8), முனீஷ் (6), மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2½) என நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்குமாரை விட்டு பிரிந்து தனது தந்தை செல்லத்துரையின் வீட்டில் குழந்தைகளுடன் ஜீவா வசித்து வருகிறார்.
நேற்று காலையில் குழந்தைகள் அனைவரும் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். மகாவிஷ்ணுவும், அஜிஸ்ரீயும் அங்கிருக்கும் ஒரு சுவரின் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து 4 குழந்தைகள் மேலே விழுந்து அமுக்கியது. 10 அடி உயர சுவர் விழுந்ததால் குழந்தைகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். குழந்தைகளின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாண்டீஸ்வரியும், முனீசும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மஹாவிஷ்ணுவும், அஜிஸ்ரீயும் கற்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டதால் அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவரையும் உயிரற்ற நிலையில் மீட்டனர். இருவர் உடல்களையும் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.