என்னது கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக்கூடாதா? எந்த ஆகமம் அப்படி சொல்லுது? கடுப்பான நீதிபதி!

By vinoth kumarFirst Published Apr 17, 2024, 6:33 AM IST
Highlights

கணவரை இழந்தவர் என்பதால் அவர் செங்கோல் வாங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் மனுத்தாக்கல் செய்தார்.  

திருமணம் ஆகாதவர்கள் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? இந்த காலத்திலும் இதுபோல கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

உலக புகழ்ப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கக்கூடிய நிகழ்ச்சி என்பது மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு செங்கோல் வழங்கப்படும். அதனை தொடர்ந்து திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கக்கூடிய வைபவங்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கப்படும். இந்த கோயிலில் தற்போது அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். அவர் கணவரை இழந்தவர் என்பதால் அவர் செங்கோல் வாங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் மனுத்தாக்கல் செய்தார்.  

அதில் மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். விழாவின் 8ம் நாளான பட்டாபிஷேகம் அன்று அலங்கரிக்கப்பட்ட குடையின் கீழ் செங்கோல் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு, மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும். அந்த செங்கோலை உரிய அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது.

தற்போது மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால் கோவிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. கோவிலின் செயல் அலுவலரும் திருமணமாகாதவர் என்பதால் அவரிடமும் செங்கோலை வழங்க இயலாது. ஆகவே மூத்த உறுப்பினரான அனந்தகுல சதாசிவ பட்டர் தகுதியான நபராக இருப்பதால் அவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்  இதுபோன்று தொடரப்பட்ட மனுக்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதி திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார். கோயிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துக்கள் தானே. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

click me!