இந்தியளவில் இரண்டாம் இடம்.. வண்ண வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் மதுரை.. முதலிடம் வர தீவிர முயற்சி!!

By Asianet TamilFirst Published Sep 4, 2019, 12:58 PM IST
Highlights

நாட்டின் இரண்டாவது அழகிய ரயில் நிலையமாக இருக்கும் மதுரை ரயில் நிலையம் இந்த வருடம் முதலிடம் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலிருக்கும் ரயில் நிலையங்களை அழகுபடுத்தி பராமரிக்க ரயில்வே துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் முக்கிய ரயில் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.

இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட ரயில்வே நிலையங்களில் மத்திய ரயில்வே வாரியம் ஆய்வு மேற்கொண்டு பரிசு வழங்கும். கடந்த ஆண்டு இந்திய அளவில் அழகிய ரயில் நிலையமாக மதுரை இரண்டாம் இடம் பெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் நடந்தது. அங்கு மதுரை ரயில்வே நிலையத்திற்கு தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப்படுவதாக பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மதுரை ரயில் நிலையம் நாட்டிலேயே முதல் அழகிய ரயில் நிலையமாக தேர்வு செய்யப்படுவதற்காக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக 10 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

ரயில்நிலையத்தில் மின் தூக்கி அமைப்பது, நடைமேடைகளில் பளிங்கு கற்கள் பதிப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ரயில் நிலையத்திற்கு வெளியே இருக்கும் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் வாசலில் 100 அடியில் கொடி கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் அறைகள் விமான நிலையங்களில் இருப்பது போல காட்சியளிக்கின்றன.

இதனிடையே தற்போது ரயில் நிலைய முகப்பில் கலைவண்ணமிக்க சிற்பங்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்களில் வண்ண வண்ண விளக்குகள் பொறுத்தப்பட்டிருக்கிறது. அது இரவு நேரங்களில் கண்களுக்கு விருந்தாக ஜொலிக்கிறது. ரயில்நிலையம் வரும் பயணிகளுக்கு இந்த காட்சிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். பாரம்பரியமிக்க மதுரைக்கு இது போன்று சிற்பங்கள் மேலும் பெருமை ஏற்படுத்துகின்றன.

கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பெற்ற மதுரை ரயில் நிலையம் இந்த வருடம் முதலாவதாக வரும் என்று ரயில் நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

click me!