முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில், தமிழக வருவாய்த்துறை ஆணையர் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .
மதுரை பசுமலையைச் சேர்ந்த தளபதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மதுல், " தமிழகத்தில் 1969 முதல் 2011 வரை 5 கட்டமாக முதல்வராக இருந்தவர் டாக்டர் மு.கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக அதிக நாட்கள் அதாவது 6863 நாட்கள் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். அதோடு 10 முறை திமுகவின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புகழுக்குரியவர். அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94 ஆவது வயதில் உயிரிழந்தார். அத்தகைய புகழ்மிகு மனிதருக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதி கோரி 2018 செப்டம்பர் மாதமே மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, அவரது எழுத்துப்பணிக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் ராஜராஜன் விருது வழங்கப்பட்டவர். மதுரையில் அவருக்கு சிலை வைத்தால், அவருக்கு பெரும் மரியாதை செலுத்தும் வகையில் அமையும்.
ஆனால், ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி வழங்கும் அரசு நிர்வாகம், டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிக்க தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை சிவகங்கை சாலை பால்பண்ணை சந்திப்பு பகுதியிலோ, மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரவுண்டானா சந்திப்பிலோ சிலை வைக்க அனுமதி கோரியிருந்தோம்.
ஆகவே, திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், " இந்த விவகாரத்தில் நாங்களாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. வருவாய்த்துறையின் ஆணையரே இதுகுறித்து முடிவெடுக்க இயலும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, தமிழக வருவாய்த் துறையின் ஆணையரை வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்ப்பதாக உத்தரவிட்டார்.
தொடர்ந்து மதுரையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பது குறித்து விதிகளின் அடிப்படையில் தமிழக வருவாய்த் துறையின் ஆணையர் பரிசீலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
- Hameedhu Kalanthar