மதுரையில் அரசு மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. மருத்துவரான இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிருந்தாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதன்காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் பிருந்தா அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைக்கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதே போல மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிறுமி தியாஷினி கடந்த சிலநாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். நேற்று காலையில் காய்ச்சல் கடுமையாகவே பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாநகரில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அடுத்தடுத்து இருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் அரசு மருத்துவர் ஒருவரே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பீதியை கிளப்பி இருக்கிறது.