தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்;- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும். தமிழகமே மதுவில் மூழ்கியுள்ளது. அரசு கவலை கொள்ளவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது. பள்ளிக்கூடம், குடியிருப்பு அருகே வைப்பதற்கு டாஸ்மாக் ஒன்றும் புத்தகக்கடையோ, மளிகைகடையோ இல்லை. மாநில ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் மதுபானம் ஆறாக ஓடுகிறது.
பூரண மதுவிலக்கை, ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்காக பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்று நீதிபதிகள் கூட்டிக்காட்டினர். ஆனால், நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா? என்ற கேள்வியை எழுப்பி வழக்கை முடித்து வைத்தனர்.