வேறு சில தனியார் மருத்துவமனைகளை குடும்பத்தினர் அணுகினர். எங்கும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரையில் ஆக்சிஜன் கொண்ட படுக்கை வசதி கிடைக்காததால் பெண் எஸ்.ஐ. உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (45). திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் (பட்டாலியன்) 1-வது பிரிவில்சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.
undefined
பின்னர், உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஆக்சிஜன் படுக்கை தேவைப்பட்ட நிலையில், சொந்த ஊரான மதுரைக்கு அழைத்து வர குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அரசரடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியபோது, ஆக்சிஜன் படுக்கை காலியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு ராஜேஸ்வரி அழைத்து வரப்பட்டார்.
ஆனால், அவர்கள் வருவதற்குள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதையடுத்து, வேறு சில தனியார் மருத்துவமனைகளை குடும்பத்தினர் அணுகினர். எங்கும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் உள்ளதாக அரசு கூறிவந்த நிலையில் ஆக்சிஜன் கொண்ட படுக்கை வசதி கிடைக்காமல் பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.