மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின!

By Manikanda Prabu  |  First Published Mar 5, 2024, 12:02 PM IST

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.

Tap to resize

Latest Videos

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு வேறு சில மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மட்டும் ஒற்றை செங்கலோடு காட்சியளித்தது.

இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் முடிந்து மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது.

ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தல்களின் போது, உதயநிதி ஸ்டாலினின் மதுரை எய்ம்ஸ் ஒற்றை செங்கல் பிரசாரம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெருமளவு கைகொடுத்தது. எனவே, தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் ஒற்றை செங்கலோடு இந்தியா கூட்டணியினர் பிரசாரம் செய்வர் என்பதால் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு இதனை அபப்டியே கிடப்பில் போடவும் வாய்ப்புள்ளது. எனவே, அதுபோன்று நடக்காமல் விரைந்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு நாடகம்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான தொடக்கம் என விமர்சித்துள்ளார். “மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது ஒன்றிய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது ஒன்றிய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர் , மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன ?

இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை.… pic.twitter.com/ILN5hUKT62

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

 

இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். மேலும், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்.” என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

click me!