வரலாற்றில் முதல் முறையாக அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளை பிடித்த வீரருக்கும், நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடிய காளைக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்து போட்டியை தொடங்கிவைத்தார். காலை 9.30 மணிக்கு போட்டிக்கான உறுதிமொழி ஏற்பு தொடங்கிய நிலையில் 11 மணிக்கு போட்டியின் முதல்சுற்று தொடங்கியது.
undefined
இதில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 சுற்றுகளாக போட்டி நடைபெற்ற நிலையில் 5 சுற்றுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் 6ஆவதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு களம் கண்டனர்.
இதில் சிறப்பாக களம் கண்ட காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவரக்கு முதல் பரிசாக மகேந்திரா தார் கார் மற்றும் அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரருக்கான 2ம் பரிசாக சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகிய இருவரும் 6காளைகளை அடக்கிய நிலையில் தலா 75 ஆயிரம் காசோலைகளும், பக்க இருவருக்கும் பகிர்ந்தும் அளிக்கப்பட்டது. 3ஆம் பரிசு மணிகண்டன் என்ற மாடுபிடி வீரருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதே போன்று போட்டியில் சிறந்த காளைகளாக முதல் இடம் பிடித்த புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு ஒரு தார் கார் மற்றும் 1 லட்சம் காசோலையும், 2ம் இடம் பிடித்த திருச்சி அணைக்கரை வினோத் காளைக்கு பைக் மற்றும் ரூ.75 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 3ம் இடம் பிடித்த மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்பவது காளைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதனிடையே சிறந்த காளைக்கான முதல்பரிசு அறிவிப்பில் முறைகேடு என 3 ஆம் இடம் பிடித்த காளை உரிமையாளர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.