
மதுரையில் 9 மாத குழந்தை மற்றும் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் அருளானந்தம்(25). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சண்முகப்பிரியா(21). பெற்றோரின் எதிர்ப்பை மீறி சண்முகப்பிரியா கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அருளானந்தத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 9 மாதத்தில் மகிமா என்ற பெண் குழந்தை இருந்தது. போதையில் வீட்டுக்கு வரும் அருளானந்தம் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சண்முகப்பிரியாவை கணவர் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு திடீரென மகிமாவிற்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், குணமாகவில்லை என தெரிகிறது. இதற்கிடையே, சண்முகப்பிரியாவிற்கும் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடலை மயானத்தில் தகனம் செய்ய சண்முகப்பிரியா வந்துள்ளார். தகனம் செய்த சிறிது நேரத்தில் சண்முகப்பிரியா உயிரிழந்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சண்முகப்பிரியாவின் பெற்றோர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தனர். இதில், குழந்தை, தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் வைத்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதையடுத்து, சண்முகப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.