பிறந்து 2 நாட்களேயான குழந்தை விற்க முயற்சி; 4 பெண்கள் கைது

By Velmurugan sFirst Published Mar 29, 2023, 4:17 PM IST
Highlights

மதுரையில் பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற 4 பெண்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை கடந்த 25ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அப்போது, செவிலியர்கள் குழந்தைக்கும் பெண்ணுக்கும் வயது வேறுபாடு அதிகமாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் யார் என கேட்டனர். அதற்கு அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். திருடிய குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை காவல்நிலைய காவலர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் உசிலம்பட்டி கக்காரன்பட்டி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என தெரிந்தது. குழந்தையை அவரது தாயே விற்கக் கொடுத்ததாகவும், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளித்துவிட்டு விற்க முயற்சி செய்யலாம் என நினைத்ததாகவும் தெரிவித்தார்.

Latest Videos

இதையடுத்து, குழந்தையின் தாயிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குழந்தையை ஆனையூரில் கொண்டு வந்து கொடுத்த அன்னமார்பட்டி மாலதி, பாண்டியம்மாள் (வயது 60), அவரது மகள் அழகுபாண்டியம்மாள் (40), மற்றொரு பாண்டியம்மாள் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை கடந்த 25ம் தேதி மாலதி மதுரை ஆனையூருக்கு ஆட்டோவில் வந்து பாண்டியம்மாளிடம் விற்பனை செய்யக் கொடுத்துள்ளார். தாய்ப் பால் இல்லாமல் குழந்தை அழுததால் பாண்டியம்மாள் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டியுள்ளார்.

இலவச கல்வி என்ற பெயரில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளி - பெற்றோர் புகார்

அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைககு வந்தபோது சிக்கினார். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறுகையில், ''குழந்தை ஐசியூ வார்டில் சிகிச்சை பெறுகிறது. தற்போது நலமுடன் உள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது குழந்தை கடத்தப்பட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை'' என்றார்.

click me!