மதுரை அருகே கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கிறது கப்பலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது உறவினர் ஒருவரின் திருமணம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக முத்தையா தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை சிவன் என்பவர் ஓட்டி வந்தார். ஓட்டுனரையும் சேர்த்து காரில் 10 பேர் இருந்தனர்.
கரடிக்கல் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. தாறுமாறாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக காரை ஓட்டுநர் திருப்பி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சக்திவேல்(10) என்கிற சிறுவன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
மற்ற அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காரில் சிக்கியியிருந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.