ஒசூர் அருகே தனியார் நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கனரக வாகன என்ஜின் உதிரி பாகங்களை திருடிய 3 சிறுவர்கள் உட்பட 8பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மோரணப்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள், லேப்டாப், ஏசி உள்ளிட்டவை திருடப்பட்டதாக அட்கோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் எஸ்ஐ சபரிவேலன் உள்ளிட்ட தனிப்படை போலிசார் மேற்க்கொண்ட விசாரணையில் அதே ஊரில் வசித்து வந்த வடமாநிலத்தவர்களான சந்தீப்(வயது 34), சுபத்(26), தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி(42), ஒசூர் பகுதியை சேர்ந்த சிவராஜ்(20), சுனில்குமார்(19) மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்டோர் உதிரி பாக பொருட்கள், லேப்டாப், ஏசி ஆகியவற்றை திருடியதுடன் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 8 பேரை கைது செய்த அட்கோ காவல் துறையினர் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரே திருடிவந்த பொருட்களை வாங்கும் பழைய இரும்பு கடை நடத்திக் கொண்டு இவர்களை ஊக்குவித்தது தெரியவந்துள்ளது.