கிருஷ்ணகிரி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் திருமூர்த்தி (27). தனது நண்பர் ஒருவருடன் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
இந்த பகுதியில் லாரி ஓட்டுனர்கள் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு இளைப்பாறுவது வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணியளவில் சின்னாறு பகுதியில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த திருமூர்த்தி, தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார். அந்த நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது திருமூர்த்தி வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அங்கு சென்று பார்த்த போது இருவரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தனர். இருசக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கிப்போயிருந்தது. விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுசம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..! உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் பலி..!