கிருஷ்ணகிரி அருகே வயலில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து இருக்கிறது சந்திரப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்மணி(35). விவசாய தொழில் பார்த்து வரும் கண்மணி சொந்தமாக வயல்நிலங்கள் வைத்துள்ளார். தினமும் வயலுக்கு சென்று வேலைகளை கவனிப்பது அவரது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கிருக்கும் மண் திட்டான பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
அந்த பாம்பு சுமார் 12 அடி நீளத்தில் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கண்மணி, அலறியடித்து அடித்து ஓட்டம் பிடித்தார். விளைநிலத்தில் மலைப்பாம்பு புகுந்த தகவல் கிராம மக்களிடையே காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். பின் அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் இறங்கினர்.
மணல் திட்டான பாறை பகுதியாக இருந்ததால் பாம்பை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின் அதை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
Also Read: ஆதிபாட்டன் சிவனுக்கு குடமுழுக்கு..! தாறுமாறாக கொண்டாட்டத்திற்கு அழைக்கும் சீமான்..!