கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (55). கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
பர்கூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி திரும்பிய 3 பேர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (55). கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அங்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ரேஷன் பொருட்களுடன் நடந்து சென்ற பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சரசு (28), அவரது மகன் தமிழ்செல்வன் (8) ஆகியோரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சீனிவாசன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பர்கூரில் இருந்து கொண்டப்பநாயனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், தாய் மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.