திருமண விழாவில் சிறப்பு ஏற்பாடாக பறை இசை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பறை இசை கலைஞர்களிடம் இருந்து ஒரு பறையை வாங்கிய பேரறிவாளன் அவர்களுடன் சேர்ந்து இசைக்க தொடங்கினார். இது அங்கிருந்தவர்களை உற்சாகம் கொள்ள செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விதித்து வருகின்றனர். தமிழக அரசு இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால் அதில் எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
இதனிடையே உடல்நலமில்லாமல் இருக்கும் தந்தையை கவனித்து கொள்வதற்காகவும் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 12 ம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவரது சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிருஷ்ணகிரியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொள்ள பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி வந்தார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் வீரமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர், கௌதமன், நடிகர் பொன்வண்ணன், சத்யராஜ், மூடர்கூடம் நவீன் உட்பட ஏராளமான பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பல ஆண்டுகளாக சிறைக்கம்பிகளுக்குளேயே வாழ்ந்து வரும் பேரறிவாளன் உறவினர்களுடன் திருமண வீட்டில் உற்சாகமாக காணப்பட்டார். திருமண விழாவில் சிறப்பு ஏற்பாடாக பறை இசை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பறை இசை கலைஞர்களிடம் இருந்து ஒரு பறையை வாங்கிய பேரறிவாளன் அவர்களுடன் சேர்ந்து இசைக்க தொடங்கினார். இது அங்கிருந்தவர்களை உற்சாகம் கொள்ள செய்தது.
மகன் பறை இசைப்பதை பார்த்த அற்புதம் அம்மாள் தானும் ஒரு பறையை வாங்கி அடிக்கத்தொடங்கினர். அதை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த காணொளி நேற்றில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.