கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில்நிலையத்திற்கு இன்று அதிகாலையில் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் பெங்களூரு நோக்கி செல்லும் விரைவு ரயிலாகும். அப்போது ரயில்நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.
பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த மயிலாடுதுறை ரயில் அருகே வந்ததும் அந்த பெண் திடீரென குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதி வேகமாக வந்த ரயில் முன் பாய்ந்ததில் அப்பெண் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த காவலர்கள் காயம்பட்டு கிடந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அப்பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.