ஆன்லைன் டிரேடிங் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கணவன், கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் மகன் விஜயகுமார் (27). இவரது மனைவி சந்தியா (23). இவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர், வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். சந்தியா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த தம்பதியினர் ஓசூர் பேகேப்பள்ளி கணபதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர்களுடன் சந்தியாவின் தாயார் திலகவதியும் வசித்து வந்துள்ளார்.
விஜயகுமார் ஓசூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அத்துடன் ஆன்லைன் டிரேடிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆன்லைன் டிரேடிங் தொழிலில் அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல், உணவு அருந்தி விட்டு தங்களது அறையில் உறங்க சென்றுள்ளனர். அதேபோல சந்தியாவின் தாய் திலகவதியும் அவரது படுக்கையறைக்கு சென்று தூங்கி உள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூர கொலை.. தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..
காலை நீண்ட நேரம் ஆகியும் விஜயகுமாரும் சந்தியாவும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த திலகவதி, படுக்கையறைக்கு சென்று பார்த்துள்ளார் அப்போது இருவரும் அறையில் இருந்த மின்விசிறியை கழற்றிவிட்டு அங்கிருந்த கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் ஓசூர் சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த கணவன் மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லை அதிகரித்து தாங்கள் தற்கொலை செய்து கொண்டதாக உயிரிழந்த கணவன் மனைவி இருவரும் கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை கைப்பற்றி சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கணவனும், கர்ப்பிணி மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.