கிருஷ்ணகிரியில் புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில் முன்னாள் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் கமாண்டர் நலச்சங்கம், இந்நாள் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், சார்பில் காஷ்மீர் அருகே புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு 4ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில் காஷ்மீர் அருகே புல்வாமா என்கிற இடத்தில் இரண்டு வாகனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் சென்ற வாகனம் இரண்டு பேருந்துகள் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பேருந்து மீது மோதி வெடிகுண்டை வெடிக்க வைத்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, சிவசந்திரன், உட்பட 40 வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு விபத்தில் வீர மரணம் அடைந்த 40 வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துப்பாக்கி, தலைக்கவசம், கொண்ட தூணுக்கு முன்னாள், இந்நாள், மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர், குழந்தைகள், கிருஷ்ணகிரி வட்டாட்சியர், தனியார் கல்லூரி மாணவிகள், ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் வீரவணக்கமும், அஞ்சலியும், செலுத்தினார்கள்.