கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணி துவைக்கும் இயந்திரத்தினுள் தஞ்சமடைந்திருந்த விஷ பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறம் அனைத்தும் காடுகளால் சூலப்பட்ட பகுதியாகும். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக விவசாய பகுதி மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் வீட்டை சுற்றி செடி, கொடிகள் பரவலாக வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் காட்டில் உள்ள விஷ பூச்சிகள் ஊருக்குள் நுழைந்து வண்ணம் உள்ளன.
கடந்த மாதம் மட்டும் குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த 40-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை பிடித்து மீண்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் விட்டனர். இந்த நிலையில் ஊத்தங்கரை வித்யா நகரில் ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைவதை பார்த்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் தேடியும் அந்தப் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரத்தை கழட்டி தேடினர். இறுதியில் விஷ தன்மை அதிகம் கொண்ட நாகப்பாம்பு அந்த இயந்திரத்தில் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பை ஒரு சாக்கு பையில் அடைத்து மீண்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.