கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் நேற்று இரவு இடம்பெயர்ந்து வந்த மூன்று காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்டு வருவதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை தளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ஓசூர் அருகே மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில் வந்து தஞ்சம் அடைந்தன. அவற்றை கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று அதிகாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு முகாமிட்டிருந்த ஐந்து யானைகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டன.
இந்த நிலையில் அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட யானை கூட்டத்திலிருந்து பிரிந்து மூன்று யானைகள் மீண்டும் இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள கர்னூர் ஏரியில் தஞ்சமடைந்து தற்பொழுது ஆனந்த குளியல் போட்டு வருகின்றன. இதை அறிந்த வனத்துறையினர் அவற்றை காட்டுப்பகுதியில் விரட்டும் பணியை மேற்கொள்வதுடன் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். யானைகள் குளியல் போடுவதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.