கொரோனா பாதிப்பில்லாத ஒரே மாவட்டம் என்ற பெயரை தக்கவைத்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம்.
தமிழ்நாட்டில் இதுவரை 1885 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். 1020 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. 523 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் மட்டுமே கொரோனா பாதிப்பு அண்டாமல் நீண்ட நாள் தாக்குப்பிடித்தன.
ஆனால் அவற்றில் புதுக்கோட்டை மற்றும் தர்மபுரியில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிய மாவட்டமாக இருந்துவந்த நிலையில், மைசூரிலிருந்து ஓசுருக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா இல்லாத மாவட்டம் என்ற பெருமையை இழந்தது கிருஷ்ணகிரி.
இந்நிலையில், அந்த நபரின் ரத்த மாதிரி இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டு கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. எனவே அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஒரே நாளில் மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி கம்பேக் கொடுத்துள்ளது. இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.