கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய கிருஷ்ணகிரி தற்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 1,824 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா அண்டாமல் பசுமை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
முதலில் கடந்த வாரம் புட்டபர்த்தி கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்ட முதியவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் சேலம் சோதனைச்சாவடியில் தடுக்கப்பட்டு சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப் பட்டதால் அது கிருஷ்ணகிரி மாவட்ட கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் சூளகிரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மற்றும் 67 வயதுள்ள இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இருவரும் பெங்களூர் சென்று திரும்பிய நிலையில் அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று உறுதியானது.
மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று திரும்பிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டியின் குடும்பத்தினர் 6 பேருக்கு நேற்று முன் தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இதனிடையே தற்போது மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி வசிக்கும் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டோரின் சளி, மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய கிருஷ்ணகிரி தற்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.