கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது லாரி மோதி உயிரிழந்த தலைமை காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருகின்றனர்.
அந்தவகையில், தன்னலமின்றி மக்களுக்காக உழைக்கும் அவர்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் காப்பதில் அக்கறை கொண்டு அரசு செயல்பட்டுவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்கின்றனர்.
காவல்துறையினர், கொரோனா தடுப்பின் அங்கமாக அமலில் இருக்கும் ஊரடங்கை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்துவருகின்றனர். அதற்காக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி சோதனை சாவடியில் பணியில் இருந்த சேட்டு என்ற தலைமை காவலர் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் அந்த காவலர் உயிரிழந்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தலைமை காவலர் சேட்டு-வின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு அவரது இழப்பு பேரிழப்பு தான் என்றாலும், அரசின் அறிவிப்புகள் அந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்கும்.