கரூர் மாவட்டம் குளித்தலையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் குளித்தலை ஊர் காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 36). இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த 10ம் தேதி சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து பழனிச்சாமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் நச்சலூரில் திருட்டுப் போன இருசக்கர வாகனத்தை ஒரு சிறுவன் ஓட்டி வரும்போது பழனிச்சாமி தனது இருசக்கர வாகனம் என்று கூறி வாகனத்தை நிறுத்தி வண்டியை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அந்த சிறுவன் ஆலத்தூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கியதாக கூறியுள்ளார்.
undefined
இதையடுத்து. கிராம பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் மூலம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரை வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் உரிய ஆவணத்துடன் பணம் கொடுத்து வாகனங்களை வாங்குதல். வாகன புக்கின் பேரில் பைனான்ஸ் முன்பணம் செலுத்துதல் உள்பட தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில். புரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் (ஹோம் கார்டு) மணிகண்டன் (30). என்பவர் தன்னிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அடமானம் வைத்ததாக கூறினார். வாகனம் திருட்டு போன பழனிச்சாமி மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும் இதே போல் நச்சலூரில் இருசக்கர வாகனம் திருட்டு போனவர்கள் சூழ்ந்து கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் குளித்தலை சிறப்பு உதவி ஆய்வாளர் சிங்காரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கிராம பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர்.
தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துறையினர் காணாமல் போனதாக புகார் கொடுத்த இரு சக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களிடம் இருந்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் வாகனங்களை அடமானம் வாங்கிய பாஸ்கர் இருவரையும் குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தோகைமலை அருகே கீழவெளியூரை சேர்ந்த சரத் என்பவர் மூலம் பல்வேறு வாகனங்கள் திருட்டு சம்பவத்தில் ஊர்க்காவல் படையை சேர்ந்த மணிகண்டன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. குளித்தலை போலீசார் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ஊர் காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குளித்தலை மற்றும் தோகைமலை காவல் நிலையங்களில் காவலர்களுக்கு உதவியாகவும், அவ்வப்போது காவல் ஆய்வாளர்களுக்கு ஜீப் ஓட்டுனராகவும் இருந்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.