கரூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி 4 சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே முட்புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதே கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சிறுவனிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர்.
கரூரில் போதை ஊசி தயாரித்து மாணவர்களுக்கு விற்பனை; 6 பேர் அதிரடி கைது
விசாரணையில் அவர்கள் கையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை அவர்கள் புகைப்பதுடன், மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்ததை அடுத்து அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட மாணவர்கள் 4 பேரும் புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பை பாதியில் முடித்து விட்டு பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்ததது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை நேற்றைய தினம் காவல் துறையினர் கைது செய்த நிலையில், இன்றைய தினம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி 4 பள்ளி மாணவர்களே பிடிபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.